728x90 AdSpace

Latest News
Wednesday, April 21, 2010

துறக்க முடியாத துறவு

அந்த நாள் வரும்வரை அவள் அழவில்லை. ஒரு மாலையில் மாலையோடு வந்தபோதுதான் என் மார்பில் சாய்ந்து மாலை மாலையாய் அழுதாள். சென்னை மீனாட்சி மகளிர் கல்லுரியின் தமிழ்த் துறையில் 21 ஆண்டுகள் ஆற்றிய பணியிலிருந்து தன்விருப்ப ஓய்வு கொண்டு விடைகோள் விழா முடிந்து என் மனைவி வீடு வந்தாள். பொன்மணி அழுதுநின்ற போது என் உதடு ஆறுதல் சொன்னது; கவிதை அழுதது.

இருபத்தோராண்டு இல்லறத்தில்
மூன்றாம் முறையென்
மார்வு நனைப்பவளே!

அழாதே கண்மணி
குழந்தையல்ல நீ
குலுங்கியழ.

இது -
நீயே எண்ணித்துணிந்த
கருமம்தானே?
பின் ஏன்
உன்னிரு கண்ணில் உப்புமழை?

பாகம் பாகமாய்க் கழிவது வாழ்வு
முதல்பாகம் முற்றும்
இரண்டாம்பாகம் எழுது


சிந்திச் சிதறும் உன்
கண்ணீர்த்தாரை
துக்கமா? சந்தோஷமா?
இரண்டுமெனில்
எந்தவிழி துக்கம்? எந்தவிழி
சந்தோஷம்?

இருபத்தோராண்டு
இழைபின்னிய பந்தத்தை....
சுற்றிச்சுற்றி உனைமொய்க்கும்
சுடிதார்ச் சுடர்களை....

பாதையோடு பூவிரிக்கும்
பவுன்மரங்களை....

தோளுரச நடந்துவரும்
தோழியரை....

கரைந்து கரைந்து
குழைந்து குழைந்து - உயிர்

குழைத்துக் குழைத்துத்
தமிழ்சொன்ன வகுப்பறைகளை....

நீயங்கே நட்டுவளர்த்துக்
குலைகுலையாய்க் கவிதைகாய்த்த
ழூகுயில்தோப்பை
இழந்தோம் என்றா
அழுதாய் குயிலே

நீ இழந்திருப்பது
ஒரு பூங்காவை மட்டுமே
வாங்கியிருப்பதோ
வான மண்டலம்

சுதந்திரச் சிறகுக்குள்
சுருட்டிவை வானத்தை

வீட்டுக்கூரை
கல்Âரிக்கூரையன்றி
வானம்பார்க்கும் வசதியிழந்தவளே

புதியது உலகு புதியது காற்று
புதியது சிந்தை புதியது எண்ணம்
அறிவு விரிவு செய்

ஆழ்வார் அழுகை
நாயன்மார் ஏக்கம்
சித்தர் கோபம்
இவைதாண்டி
இன்னும் பலலோகம்
இயங்குதல் பார்
வா
எப்போதும் என்னோடிரு
நானெழுதும் பூங்காவில்
உனக்கொரு மரமுண்டு

பழையன புதியன
மீண்டும் பயில்வோம்

தேர்வு கருதி
இலக்கியம் பயில்வது
மூக்கின் வழியே
உணவு கொள்வது

இனிமேல் படி
இலக்கியம் புரியும்

ஹோமர் - இளங்கோ
வள்ளுவர் - கன்பூசியஸ்
கம்பன் - காளிதாசன்
பாரதி - nஷல்லி
கலைஞர் - பரிமேலழகர்
கயாம் - கண்ணதாசன்

மாப்பசான் - ஜெயகாந்தன்
நீ - நான்
ஒப்பிட்டுப் பிரித்து உண்மை தெளிவோம்

கலங்காய் துணைக்கிள்ளாய்
என்னிரு சிறகும்
உன்னொரு கூடு

என்மேல் வீசும் பூவெல்லாம்
உன் கூந்தலுக்கு
எறியும் வேலெல்லாம்
என் மார்புக்கு

இடி மின்னல் புயல் எனக்கு
மழைத்துளி மட்டுமே உனக்கு

காற்றை வடிகட்டி
சுகந்தம் மட்டுமே நீ
சுவாசிக்கத் தருவேன்
கற்றது கையளவு
படைத்தது நகத்தளவு

எழுது

வாழ்வு பிழிந்து பொருள்எடு
வானம் பிழிந்து மையெடு

தமிழின்
நீள அகலம் பெருக்கு

பாகம் பாகமாய்க் கழிவது வாழ்வு
முதல்பாகம் முற்றும்
இரண்டாம் பாகம் எழுது

கருமணியிற் பாவாய்! உன்
கனவுகள் வெல்க

உன் கண்ணீர் துடைப்பேன்
என் கண்ணில் நீர்மல்க


  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

Item Reviewed: துறக்க முடியாத துறவு Rating: 5 Reviewed By: Blank