728x90 AdSpace

Latest News
Wednesday, April 21, 2010

முதன் முதலாய் அம்மாவுக்கு

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போபபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?


  • Blogger Comments
  • Facebook Comments

10 comments:

  1. கவிதைகள் மிக அழகாக இருக்கிறது ....
    http://aadaillathavarigal.blogspot.com/

    ReplyDelete
  2. என்னை அழ வைத்த கவிதை...

    ReplyDelete
  3. வைரமுத்து நி "வைர முத்து"

    ReplyDelete
  4. நீ

    வைரமோ
    முத்தோ - ஆனால்
    கரிகாலன் பார்வையில் - உன்
    கவிதை வரிகள்
    வைரம்பாய்ந்த
    முத்து
    உன்
    வாய்மொழி
    வார்த்தைகளெல்லாம்
    காற்றில் பட்டாலே
    கவிதை
    தமிழுக்கு பிடித்த தமிழன்
    நீ - ஒருவன்
    மட்டுமே
    நீ தானே
    அவளை
    அழகின் எல்லைக்கே
    அழைத்துச் சென்று
    தேனில் நனைத்து
    காற்றிலும் காகிதத்திலும்
    என்றுமே
    தெவிட்டாத
    சுவைவூட்டுகிறாய்
    உன்
    கால்தடம்
    தேடும் போதே - உன்
    கவிதை
    என்
    கரம் பிடித்து
    அழைத்து செல்கிறது
    நீ
    கடந்து வந்து
    பாதையில் -நான்
    நடைபயில...

    ---கவிதைக்காதலன்.

    ReplyDelete
  5. எனது மனதை கரைய வைத்த கவிதை...
    http://sinthujan26.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
  6. இந்த கவிதையின் கடைசி வரிகள் தான்.....
    எனக்கொன்னு ஆச்சுனா உன் கவிதை களை ரசிக்க ஆயிரம் பேர் உண்டு
    உனக்கொன்னு ஆச்சுனா நிச்சயமாக இந்த தமிழ் தேடும் தன் அப்பனை..

    ReplyDelete
  7. Kallum karaiuthada kavithaigull kanneraium vaithayo

    ReplyDelete
  8. VAIRAMUTHU.. UN VAI THIRANTHAL ELL MUTHUKALUME VAIRAM THAAN..................

    ReplyDelete

Item Reviewed: முதன் முதலாய் அம்மாவுக்கு Rating: 5 Reviewed By: Blank