
இந்தக் குளக்கரையில் நான் நடந்து
இன்றுதான் மீண்டும்
நடைபயில்கிறேன்
காலில் பரவசம்
நெஞ்சில் வலி
அன்று கூவிய பறவைகளில்
ஒன்றையும் காணோம்!
எந்த மழையில்
எந்தக் கோடையில்
மாண்டிருக்குமோ?
அன்று குடைபிடித்த மரங்களில்
ஏதுமில்லை இப்போது
கதவாய் - சாம்பலாய்
எவ்வடிவம் பூண்டனவோ?
உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன
இலங்கைத் தமிழராய்
இடம்பெயர்ந்து போயினவோ?
அன்று
சேலையைக் கல்லிலும்
மார்பால் மனசையும்
துவைத்துப் பிழிந்த பெண்கள்
மூத்து முதிர்ந்தாரோ
செத்தழிந்து போனாரோ?
அன்று
தத்தியெறிந்த தவளைக்கல்
தூர்வாரக் குளத்தாழத்தில்
கிடக்குமோ? கிடக்காதோ?
இப்போதென் நுரையீரல் நிறைப்பது
சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?
புழுதிசுமந்த புதிய காற்றோ?
அதோ
ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்
வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்
நான் அன்றுகண்ட மங்கையரோ
இல்லை
முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?
அன்று
குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா
இன்று முக்குளித்தால்
கிட்டுமோ? கிட்டாதோ?
பூமியின் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
எல்லாம் எல்லாம்
மாறித் தேய்ந்தன
ஆனாலும்
நம்பிக்கையோடு தேடுகிறேன்
குளக்கரையில் பதிந்த என்
பிஞ்சுக்கால் தடங்களை
* * * * *
thaai thamizhagam,
ReplyDeleteadhan thavanai murai azhivai,
azhagaai kuriyadhu vairamuthu vin azhagu.