ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியப் பரப்பு. காதல் என்ற உள்ளடக்கம் மட்டும் மாறாமல் தொடர்கிறது வடிவங்களை மாற்றிக்கெண்டு. அந்தந்தக் காலங்களில் மேலோங்கி விளங்கும் இயக்கங்களில் காற்றெடுத்துக் கொண்டுதான் காதல் சுவாசித்து வந்திருக்கிறது. இதை உணர்த்தவே - இந்தக் கவிதைகளில் அந்தந்தக் கால உள்ளீடுகளையும் வடிவங்களையும் சொல்லாட்சிகளையும் கையாண்டிருக்கிறேன்.1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி
* * * * *
2 காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.
* * * * *
3 சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!
* * * * *
4 சிற்றிலக்கியக் காலம்
தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்
* * * * *
5 தேசிய காலம்
சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம் ஊற்றினாள்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?
* * * * *
6 திராவிட காலம் - 1
இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?
* * * * *
7 திராவிட காலம் - 2
விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது
உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது?
விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே
* * * * *
8 புதுக்கவிதைக் காலம் - 1
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
* * * * *
9 புதுக்கவிதைக் காலம் - 2
உன்வீட்டு ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.
* * * * *
காதல் கவிதைகள் மிக அழகாக இருக்கிறது ....
ReplyDeletehttp://aadaillathavarigal.blogspot.com/
super
ReplyDeletevery vice
ReplyDeletecute lines
ReplyDeletewhat deep meaning awesome
ReplyDeletemuththanadhu sirppikkul irundhu parththadhundu
ReplyDeleteaanal vairaththukkul irundhu parththadhunda
parungal solli parungal vizhi muudi manam thirandhu
idhal muudiththirandhu "vairamuththu"enru