728x90 AdSpace

Latest News
Wednesday, April 21, 2010

நண்பா உனக்கொரு வெண்பா

ஒரு கருத்தை அழுத்தமாகவும் அடர்த்தியாகவும் உணர்த்துவதற்கு ஒரு தமிழ்க் கவிஞனுக்கு வெண்பாவினும் சிறந்த வடிவம் வேறில்லை. காலங்காலமாய்க் கட்டிக் காக்கப்பட்டிருக்கும் வெண்பாவின் கட்டுமானத்தை எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய்க்கு எதிரான ஆயுதமாக இதில் ஏந்தியிருக்கிறோம். ஓர் ஏழைப் புலவனின் ஈன முனகல்கூட வெண்பாவில் பதிவு செய்யப்படுகிறபோது அரசு ஆணைக்குரிய கம்àரம் பெற்றுவிடுகிறது. எய்ட்ஸிலிருந்து இளைய தலைமுறையைக் காப்பது கவிதைக்குக் கடமையாகிறது. அதனால் அதை வலிமையான வடிவத்தில் உணர்த்த நினைத்தோம்; வெண்பா வந்து விழுந்தது. எய்ட்ஸ் ஒழிப்பு இயக்கங்களும் அமைப்புகளும் இந்தக் கவிதையை அதன் சொந்த வடிவம் மாறாமல் எந்த வடிவத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உளமார ஒப்புதல் தருகிறேன்.

ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!

இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!

கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!

தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!

மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!


துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!
  • Blogger Comments
  • Facebook Comments

2 comments:

  1. அத்துனையும் உண்மை. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. So. Very. Sweet.so my best. Whishes

    ReplyDelete

Item Reviewed: நண்பா உனக்கொரு வெண்பா Rating: 5 Reviewed By: Blank