728x90 AdSpace

Latest News
Wednesday, April 21, 2010

பாடம்

நீதிமொழி சொன்ன
ஆதிமொழி எது?

தமிழா? சீனமா?
இலத்தீனா? கிரேக்கமா?

இல்லை.... எதுவுமில்லை....

இயற்கை
தன்
நெற்றியில்....புருவத்தில்
கண்ணில்....கன்னத்தில்
மார்பில்....அக்குளில்
எழுதிவைத்த நீதியைத்தான்
மனிதன் மொழிபெயர்த்தான்

மேல்நோக்கி எரியும் தீ -
மேல்நோக்கி முட்டும் விதை -
மேல்நோக்கி உயரும் முகில் -
மேல்நோக்கி வளரும் மனிதன் -
எல்லாம் மேல்நோக்கியே!

கீழ்நோக்கிப் பொழியும்
மழைமட்டும் பொய்த்துவிடின்
மேல்நோக்கி வளர்வன
பூமியில் ஏது?
மழை சொன்னது :

''கருணை உள்ளவனே
உயிர்களுக்குத்
தலைமை தாங்குகிறான்''

கரை விழித்திருக்கிறதா?
தூங்கிவிட்டதா?
தெரியாது

பாடத் தெரிந்த பறவைகள்
தன் பாடலுக்குக் கைதட்டுமா? கைகொட்டுமா?
தெரியாது

தாய்மொழியே புரியாத மனிதர்க்குத்
தன்பாடல் புரியுமா? புரியாதா?
தெரியாது

ஆனால் கூழாங்கற்களை
வாயில்போட்டுக் கொண்டு
நதி பாடிக்கொண்டே போகிறது
நதியும் ஒரு £தை சொன்னது :

''கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே!''

ஏறுவோர் அனைவரையும்
குனிந்துவரச் சொல்கிறது
இறங்குவோர் அனைவரையும்
நிமிர்ந்து செல்லச் செய்கிறது

மலை சொன்னது :
''பணிந்து வாழ்ந்தால்
உயர்ந்து போவாய்
நிமிர்ந்து திரிந்தால்
இறங்கிப் போவாய்''



வேர்களை அறுத்தோடும்
நதியின் மீதும்
கலகலவென்று பூச்சொரியும்
கரையோரத்துக் கிளைகள்...
அறுத்ததற்குக் கோபமில்லையாம்

நனைத்ததற்கு நன்றியாம்


மரம் சொன்னது :
''இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்''

முகவரி இல்லாமல்
பூமிக்கு வருகிறது
எங்கே சிப்பி விழித்திருக்கிறதோ
அங்கே விழுந்து முத்தாகிறது

மழைத்துளி சொன்னது :
''முத்துக்கான வித்து
எப்போதும் விழலாம்
விழித்திரு மனிதா விழித்திரு''


கீழே சேறு
மேலே பாசி

தன்னைச் சுற்றிலும் தவளையர் கீதம்
ஆனாலும்
தண்ணீர்த் தீயாய் பூத்திருக்கும்
தாமரைக்குத்தான்
என்னவொரு சௌந்தர்ய கம்àரம்!

தாமரை சொன்னது :
''சார்பால் பெருமை பெறுவது எளிது
சார்புக்குப் பெருமை தருவதே பெரிது''
அஸ்தமனம் என்றார்கள்
ஆந்தைகள் மகிழ்ந்தன

நட்சத்திரங்கள்
கும்மி கொட்டிக் கொண்டாடின

தான் சாகவில்லை என்பதை
நிலவுக்கு ஒளியூட்டி
நிரூபித்தது சூரியன்

சூரியன் சொன்னது :
''மறைந்தும் மறையாதிருக்க
உன் சுவடுகளை விட்டுச்செல்''

எரிமலை தும்மியது
ஐம்பது கிலோ மீட்டர்
அக்கினிக் குழம்பு

எந்தக் குடிமகனும்
இடம் பெயரவில்லை

அக்கினிக் குழம்பின் ஆறிய சாம்பலில்
உழுது பயிரிட்டதில்
ஆறுமடங்கு அமோகவிளைச்சல்


எரிமலை சொன்னது :
''எந்தவொரு தீமையிலும்
இன்னோர் நன்மை உண்டு''
  • Blogger Comments
  • Facebook Comments

2 comments:

  1. அருமை http://gunathamizh.blogspot.com/2009/09/blog-post_10.html

    ReplyDelete
  2. Yen kavithai thevane ...nantri yanagu silla nalla vitthugalai yennul vithaithathugu

    ReplyDelete

Item Reviewed: பாடம் Rating: 5 Reviewed By: Blank