Monday 11, Aug 2025

728x90 AdSpace

Latest News
    Sunday, April 25, 2010

    Blank தோழிமார் கதை



    ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
    புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
    பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

    சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
    இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
    பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
    இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

    கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து
    கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
    நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
    கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
    பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
    வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

    கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
    சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
    எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
    என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

    வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
    பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
    என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
    விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

    ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
    பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
    ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
    சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

    ஆடு கனவுகண்டா அருவா அறியாது
    புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
    எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

    வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
    தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
    எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
    உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

    நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
    வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
    ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
    போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!

    Vairamuththu, vairamuttu, vairamuththu, Tamil Books, Tamil Actress, Tamil Songs, MP3
    • Blogger Comments
    • Facebook Comments

    11 comments:

    1. கவிப் பேரரசுவின் கவிதையை, நல்ல இருக்குன்னு பின்னூட்டம் எழுதி சராசரியாக்க விரும்பவில்லை.
      வேறு எதுவும் எழுதவும் தெரியவில்லை, நான் என்ன செய்யட்டும்?

      ReplyDelete
    2. உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைப்பூவை பரிந்துரை செய்யலாம்.... தொடருங்கள் பகுதியில் இணையலாம்

      ReplyDelete
    3. தோழரே ஒரு அறிய வலைத்தளம். உங்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிவேற்றுங்கள். வைரமுத்துவின் தமிழ் இந்த நுற்றாண்டின் ஒரு அறிய பொக்கிஷம். உங்கள் பதிவு தமிழுக்கு செயும் தொண்டு..என்றும் அன்புடன்

      ReplyDelete
    4. மிக அருமை. நானும் யோசித்துப் பார்க்கிறேன்.இந்த நடை புலப்படுவதில்லை. நீங்கள் எனக்கு வகுப்பு எடுக்க முடியுமா?

      ReplyDelete
    5. மிக அருமை. உங்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள்

      ReplyDelete
    6. மிக அருமை. அறிய வலைத்தளம்,உங்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள்

      ReplyDelete
    7. வைரமுத்துவின் கவிதைகளில் எனக்கு மனப்பாடமாகத் தெரிந்த‌ சில கவிதைகளில் இதுவும் ஒன்று. இப்பதிவில் சில பிழைகள் கவனித்தேன். சரிபார்க்க 'பெய்யெனப் பெய்யும் மழை' புத்த‌கம் என்னருகில் இல்லை. என் ஞாபகத்தில் இருந்து சொல்கிறேன். சரியெனில் சரிசெய்து கொள்ளுங்கள்.

      1) "இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?" என்ற வரிக்கு அடுத்தாக‌

      "மருதாணி வெச்ச
      வெரல் மடக்காம நானிருக்க‌
      நாசமாப் போன
      நடுமுதுகு தானரிக்க‌
      சுறுக்கா நீ ஓடிவந்து
      சொறிஞ்ச கத நெனவிருக்கா?" என்ற வரிகள் வரவேண்டும்.

      2) "கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க" என்ற வரிக்கு முன்னால்

      "வெள்ளாறு சலசலக்க
      வெயில்போல நெலவடிக்க‌
      வெள்ளித் துருவல்போல்
      வெள்ளை மணல் பளபளக்க" என்ற வரிகள் வரவேண்டும்.

      3) "வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க" என்ற வரி தவறான இடத்தில் உள்ளது.

      4) "பல்லாங்குழி ஆட‌யில‌ பருவம் திறந்துவிட
      ஈர‌ப்ப‌சை க‌ண்டு என்ன‌மோ ஏதோன்னு
      சாகத்தான் போறோமுன்னு சத்தமிட்டு நானழுவ‌" என்று வ‌ர‌வேண்டும்.

      5) "எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்" என்ற‌ வ‌ரிக்கு அடுத்த‌தாக‌
      "இருவது வயசோட இருவேறு திசையானோம்" என்ற‌ வ‌ரி வ‌ர‌வேண்டும்.

      - ஞானசேகர்

      ReplyDelete
    8. நண்பர்களே! தயவு செய்து தமிழைத் தவறாகத் தறவிறக்கம் செய்யாதீர்கள்.

      ReplyDelete
    9. நண்பர்களே! தயவு செய்து தமிழைத் தவறாகத் தறவிறக்கம் செய்யாதீர்கள்.

      ReplyDelete
    10. தாய்த் தழை தூய வடிவில் எழுதப் பழகுங்கள் அன்பளே.

      ReplyDelete
    11. தாய்த்தமிழை தூய வடிவில் எழுதப் பழகுங்கள் அன்பர்களே.மெல்லினம்,வல்லினம் சரியாக இல்லையே. அறிய வலைத்தளம் தவறு. அரிய வலைத்தளம் என்பதே சரி.

      ReplyDelete

    Item Reviewed: தோழிமார் கதை Rating: 5 Reviewed By: Blank